தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ். கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
அரச காணிகளிலிருந்து 1980ஆம் ஆண்டு முதல் காணிகளை பெற்றுக்கொண்ட 53 பேருக்கான காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டன.
அத்துடன், தேசிய வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியின் கீழ், 51 அரச உத்தியோகஸ்தர்களுக்கான வீடமைப்பு கடன் திட்டத்தின் முதற்கட்டமாக தலா 5 இலட்சத்திற்குரிய காசோலைகளும் வழங்கப்பட்டன.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா காணி உறுதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிற்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் எம்.இரவீந்திரன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.