காணி அபகரிப்புக்கு எதிராக புதனன்று யாழில் ஆர்ப்பாட்டம்

tellippalaiவலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தால் தீவிரமாக்கப்பட்டுள்ள காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இந்த ஆர்பாட்டம் காலை 11 மணி தொடக்கம் 1 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணி அபிவிருத்தி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை கடந்த மாதம் திறந்து வைத்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும் தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2 இன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30000திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

மேற்படி காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய அனைத்து மாவட்டங்களில் தீவிரமாக நடைபெறுகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இராணுவக் குறைப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவது போல பாசாங்கு காட்டிவரும் இலங்கை அரசு மறுபுறத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இந் நிலச் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்தக் கோரியும், இடம்பெயர்ந்து வாழும் வலி வடக்கு உட்பட்ட அனைத்து மக்களையும் உடன் மீள் குடியமர அனுமதிக்க கோரியும், இவ்விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிவடக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களது வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts