காணிப் பிரச்சினையில் தீர்வை வழங்க வற்புறுத்தும் கடப்பாட்டையே நாம் ஆற்ற முடியும்: சி.வி.கே. சிவஞானம்

காணிப் பிரச்சினைகளில் தீர்வை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வடக்கு மாகாண சபையால் முடியாது என்றும் தீர்வை வழங்க வற்புறுத்தும் கடப்பாட்டையே ஆற்றும் வரையரை மாகாண சபைக்கு தற்போது உண்டென்றும் வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில் நேற்று கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபையைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் பூரணமான ஆதரவை கொண்டுள்ளதுடன் இந்த நியாயத்திற்காக நாம் செயற்படவேண்டும் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

கேப்பாபுலவு மக்களின் பிரச்சனைக்கான தீர்வு குறித்து ஊடவியலாளர்கள் கேட்டபோது இதனை முக்கிய விடயமாக கருதி மாகாண மட்டத்தில் வேலைகளை முன்னெடுப்பதாகவும் பொறுப்பு வாய்ந்த இடங்களில் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி, மற்றும் எதிர்கட்சித் தலைவருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறித்த காணிகள் விடுவிக்கப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் ரவிகரனினால் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் தமது பிரேரணைகள் தீர்வினை வழங்கும் வற்புறுத்தலுக்கானவை என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts