‘காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை’

‘வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகச் சுமார் 4,400 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் 460 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், விடுவிக்கப்படும் காணிகளைத் தவிர்த்து மிகுதிக் காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாகவும், அதற்காக நியாயமான நட்டஈட்டை, முகாம் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறப்பட்ட கடிதத்துடன் கூடிய விண்ணப்படிவங்கள், யாழ்ப்பாணத்திலுள்ள முகாம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதனை அறிந்த நான், இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவ்வாறான அறிவித்தல் எதனையும் தான் கொடுக்கவில்லையென பிரதமர் கூறினார்.

தொடர்ந்து, மீள்குடியேற்ற அமைச்சருக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, அவர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு கூறியுள்ளார். ஜனாதிபதி தான் அவ்வாறு அறிவித்தல் கொடுக்கவில்லயென்பதைக் கூறியுள்ளதுடன், யார் இவ்வாறான அறிவித்தலைக் கொடுத்தனர் என்பது தொடர்பில் ஆராயுமாறும் கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளரிடமும் இந்த விடயம் தொடர்பில் வினவுவதாகக் கூறியுள்ளார் என்றும் மாவை எம்.பி தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் காணிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் 2,176 வழக்குகள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில், நட்டஈடு வழங்குதல் தொடர்பான அறிவித்தல்களை விடுக்க முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts