காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள்: சுரேஷ்

இராணுவ வசம் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் வேறு வழி இன்றி மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்றய தினம் மாலை 4.30 மணியளவில் கோண்டாவில் சேவலங்கா நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தை சார்ந்த 50ற்கும் மேற்பட்ட பொது அமைப்புகள் இன்று கூடி ஆராய்ந்து உள்ளோம். காணிகளை விடுவிப்பது தொடர்பாகவே இக் கலந்துரையாடலில் பேசப்பட்டது. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு காணிகளை எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக ஐனாதிபதி வாக்குறுதி அளித்தாக கூறப்படுகிறது.

அப்படி மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் எதிர்வரும் 8ம் திகதி புதன்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கடையடைப்பு மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது வலிவடக்கு உட்பட பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமது கோரிக்கைகளை ஏனைய அமைப்பினர் முன்வைத்து இருக்கின்றனர். ஆகவே ஏனைய பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும்.

அரசாங்கம் மிக விரைவாக முழுமையான காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியமர்த்த வேண்டும். அவ்வாறு குடியேற்றப்படாத பட்சத்தில் அக் காணிகளுக்கு சொந்தமான மக்கள் மாற்றுவழி இல்லாது போராட்ட களத்தில் குதிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அரசாங்கம் இவ் விடையங்களில் விசேட கவனம் எடுத்து பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது எம்முடைய பொதுவான கோரிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Posts