‘பலாலி மற்றும் வசாவிளான் விமான நிலைய சந்தியை அண்மித்த பகுதிகள், விமான நிலைய விரிவாக்கலுக்காக மூன்றாம் கட்டமாக மதிப்பீடு செய்யுப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் விடுவிப்பது சாத்தியமற்றது’ என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான உறுதி செய்யப்பட்ட கடிதம் வழங்கும் நிகழ்வு, கீரிமலை பகுதியில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘கடந்த ஆறு மாதகாலமாக அரசாங்க அதிபருடன் இணைந்து செயற்படுகிறோம். ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய, காணி இல்லாதவர்களுக்கு 2 பரப்பு காணியுடன் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
இங்கு வழங்கப்படும் கடிதமானது, உங்கள் வீடுகளுக்கான உறுதியினை வழங்குகின்றது. குறுகிய காலத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகளில் சில காலத்துக்கு இராணுவம் தொடர்ந்தும் இருப்பது தவிர்க்கமுடியாது. மேலும் சில காணிகள் குறுகிய காலத்தில் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜே-233 காங்கேசன்துறை மேற்கு, ஜே-234 காங்கேசன்துறை மத்தி, ஜே-235 காங்கேசன்துறை தெற்கு, ஜே-236 பளை வீமான்காமம், ஜே-250 தையிட்டி தெற்கு, ஜே.-47 தையிட்டி கிழக்கு ஆகிய கிராமசேவையாளர் பிரிவில் இரண்டு இராணுவமுகாம்கள் தொடர்ந்தும் இருப்பது தவிர்க்கமுடியாதுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ‘பலாலி விமானநிலையத்தைச் சூழ்ந்த பகுதிகள் இந்த நிலமையில் விடுவிக்கப்படாத பகுதிகளாக இணங்காணப்பட்டு அவற்றுக்கான மதிப்பீடுகள் வழங்குவதற்கான கடிதம் மூன்றாவது கட்டமாக வழங்கப்படவுள்ளது.
உண்மையில் சிறிய பகுதிகளில் நீங்கள் வாழ்வதை விட உங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடானது அதிகமானது’ என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலர் கனகராஜா ஸ்ரீமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.