முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பிலக்குடியிருப்பு காணிகள் இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முழுமையான காணிகள் விடுவிக்கப்படவில்லை. பகுதியளவிலேயே இன்று காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனால், தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமது எல்லைகளை விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்து பின்னோக்கி நகர்த்தி எல்லைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.