காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், எஸ். சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், வியாழேந்திரன், கோடீஸ்வரன், ஸ்ரீ நேசன், யோகேஸ்வரன், வடக்கு முதல்வர் சார்பில் மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோரும் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசையும் பங்கேற்றனர்.

பாதுகாப்பு தரப்பினரின் வசமுள்ள மன்னார் முள்ளிக்குளம் காணி உள்ளிட்ட வடக்கு,கிழக்கு காணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பண்ணைக் காணிகளை மாகாண சபைகளுக்கு விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சார்பில் கலந்து கொண்ட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கில் படைத் தரப்பினரிடத்தில் உள்ள , இராணுவத்தினர் கையாளும் வளங்கள், குறிப்பாக விவசாய நிலங்கள், நீர் வழங்கல் போன்றவை தொடர்பான விடயங்களை விரிவாக குறிப்பிட்டு ஆவணமொன்றை சமர்ப்பித்தார்.

Related Posts