‘காணிகளை விடுவிக்காவிடின் எதிர்க்கத் தயாராகுங்கள்’

‘நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்’ என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வசாவிளான் பகுதி மக்கள் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் ஏமாறும் நிலையே காணப்படுகிறது. நல்லாட்சி அராசங்கத்தினால் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்த பொதுமக்களுடைய காணிகள், படிப்படியாக விடுவிக்கப்பட்டாலும் வசாவிளான் பகுதியில் உள்ள மக்களுடைய காணிகளை இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளது.

வசாவிளான் பகுதிகளில் உள்ள காணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு உரித்தான உறுதியுள்ள காணிகள் ஆகும். இவ்விடங்களுக்கு உரிய பூர்வீக மக்கள், தொடர்ந்தும் உறவினர்களின் வீடுகளிலும் வாடகைக்குமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யுத்தம் முடிவடைந்த 7 வருடங்கள் கடந்தும் பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு உறுதி மொழிகள் ஒராளவு நிறைவு பெற்றாலும் வசாவிளான் பகுதியின் விடுவிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியமர்த்தி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என அரசாங்கம் எண்ணுகின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கவேண்டிய தேவை உள்ளது.

அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொள்வதன் ஊடாகவே அரசாங்கத்துக்கு அழுத்தத்தினை கொடுக்கமுடியும். அதற்கு அனைவரும் தயாராகுங்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் இது தொடர்பில் கதைப்பார்கள் என்ற நம்பிக்கையினை கைவிட்டு, தொடர் உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டும். அஹிம்சை ரீதியாக மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கமுடியும். அதுவும் முடியாவிட்டால் பிரதேச செயலகத்தினை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். போரட்டத்துக்கு மக்கள் ஒன்றிணைவதன் மூலமே காணிகளை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts