இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்கும் போது தான் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதுடன் 6831 ஏக்கர் காணியினை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதை ஈ.பி.டி.பி கடுமையாக எதிர்க்கின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் செய்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்ற பகுதிகளை சென்று பார்வையிட்ட பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலினை மேற்கொண்டார்.
அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் 1828 குடும்பங்களைச் சேர்ந்த 4800 பேர் 34 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதைவிட 19,800 பேர் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றார்கள். அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும் வரை அப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கும்.
60 வீதமான காணிகளை இராணுவம் கையளிக்கும் போது தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். அந்தக் காணிகளை விடுகின்றோம் என்று கூறுவதன் மூலம் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
மீள்குடியேற்றத்தினையே தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வருகின்றோம். மீள்குடியேற்ற அமைச்சரும் அதை ஏற்றுக் கொண்டாலும், அது தொடர்பில் அவர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்பட முடியும்.
தீர்க்கமான முடிவு எடுக்கும் பட்சத்தில் தான் மக்களுக்கு உறுதியான முடிவுகள் கிடைக்கும். அந்த வகையில், எமது கட்சியின் நிலைப்பாடும் அதுதான். மக்களுக்குரிய நிலங்கள் மக்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றோம்.
மாற்றுக் காணிகள் வழங்குவதனையும், மற்றொருவரின் காணியில் குடியேற்றம் செய்வதனையும் மக்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. 6831 ஏக்கர் காணியினை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் அன்று முதல் எதிர்த்து வருகின்றோம்.
மக்களின் காணிகளை இராணுவம் தங்களின் தேவைக்கு கையகப்படுத்துவதை எதிர்க்கின்றோம். நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலும் இதனை வலியுறுத்தியிருக்கின்றேன். அபிவிருத்தி என்பது வேறு, இராணுவத் தேவை என்பது வேறு, அபிவிருத்திக்காக மக்களின் காணிகள் சுவீகரிப்பது இயல்பான விடயம், அது இலங்கை மட்டுமல்ல, உலக நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது.
ஆனால், வலி வடக்கு பகுதியில் 6831 ஏக்கர் காணியினை சுவீகரித்து பிரமாண்டமான இராணுவ முகாம்களை அமைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நலன்புரி நிலையங்கள் மூடப்படவேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சர்