காணிகளை அபகரித்து வீடுகளை உடைத்தால் நல்லிணக்கம் ஏற்படுமா?: சரவணபவன் எம்.பி

saravanabavan_CIதமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும், வீடுகளை இடித்தும் வெறியாட்டம்போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் 65ஆவது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவும் உள்ளது.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உரிமை, உரிமை எனக் கூச்சலிட்டுக் கொண்டு, இருப்பதையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனத் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இருப்பவற்றையும் பறிகொடுக்கிறார்கள் என்பதன் மூலம் இருப்பவையும் பறிக்கப்படுகின்றன என்ற உண்மையை அவர் ஒப்புக் கொள்கிறார். இருப்பவற்றைப் பறிக்கும் அரசாங்கத்தில் அவரும் ஒரு பங்காளி என்பதும், அப்படியாயின் 18ஆவது திருத்தச் சட்டம், ‘திவிநெகும’ சட்டம் என்பதற்கு ஆதரவு வழங்கி பறிப்பவர்களுக்கு அவர் கரம் கொடுத்து கொண்டிருக்கின்றார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமையுடன் வாழ்கின்றனர் என்று ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் தமிழ் மக்கள் இருப்பவற்றைப் பறிகொடுக்கிறார்கள் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒப்புக்கொள்கின்றார்.

தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் ஸ்திரமான அபிவிருத்தி மூலமுமே அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்கத்திற்கு விரோதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளே அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கான கதவுகளைத் திறந்து விடுகின்றன என்பதை மறுத்து விட முடியுமா?

இலங்கை அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒருபுறம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பனவாகவும், இன்னொரு புறம் சாதாரண இயல்பு வாழ்வைக்கூடப் பறிப்பனவாகவும் அமையும் போது நாட்டில் தேசிய நல்லிணக்கம் எவ்வாறு உருவாக முடியும்?

இலங்கையில் எங்குமே உயர்பாதுகாப்பு வலயம் இல்லையெனவும் 2000 ஹெக்டர் காணியில் மட்டும் வடக்கில் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்குக் காணி தேவைப்பட்டால் முறைப்படி கையகப்படுத்தப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் வணிககுலசூரிய தெரிவித்துள்ளார்.

படையினரால் எந்த ஒரு வீடும் அழிக்கப்படவில்லை எனவும்அவர் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.
ஒரு புறம் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு மறுபுறம் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும் வீடுகளை இடித்தும் வெறியாட்டம்போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியுமா?

இத்தகைய அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. உதயன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டதும், பல பணியாளர்கள் கொல்லப்பட்டதும், பிரதம ஆசிரியர், செய்தி ஆசிரியர் உட்படப் பல பணியாளர்கள் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையைத் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளன.

கொலை, கொலைமுயற்சி, தாக்குதல், தீயிடல் எனப் பலவித வன்முறைகள் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை. எங்கும் பரவலாகப் படை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தும், பொலிஸாருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தும் ஏன் இத்தகைய வன்முறைகள் தடுக்கப்படவில்லை? ஏன் சம்பந்தப்பட்டவகள் கண்டு பிடித்துத் தண்டிக்கப்படவில்லை?.

இப்படியாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடரப்படுவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சக்திகள் எவை? அவர்களுக்கு பின்னணியில் நிற்பவர்கள் யார்?, இன்று வடமாகாணசபையின் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடபகுதியின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க என வடமாகாணத்தின் ஒவ்வொரு முனையிலும் தங்கள் அதிகாரக் கரங்களை விரித்திருக்கும் இவர்களே, இக் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் கடப்பாடுடையவர்கள்.

இவர்கள் வடக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சிவில் நிர்வாகத்தையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் சிப்பாய்களாகவே அரச அதிகாரிகளையும், அரச பணியாளர்களையும் கையாள்கின்றனர். இதனால் இன்று வடக்கில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பிரதேசசபைகளின் தலைவர்களோ, உறுப்பினர்களோ பொருட்படுத்தப்படுவதில்லை. அபிவிருத்தி தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்படும் திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள் எப்படி அபிவிருத்தியில் பங்குகொள்ள முடியும்?
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் ஒட்டியிருக்கும் இளம் செயலாளரின் செயற்பாடுகள் இராணுவ சர்வாதிகாரிகளின் வேலை முறை போல் அமைந்திருப்பதாகப் பல முனைகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆளுநரைத் திருப்திப்படுத்தும் வகையிலும் ஈ.பி.டி.பி.தலைமையகத்திலிருந்து வரும் கட்டளைகளுக்கு அமையவுமே அவரின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் கருத்துகள் பலமாக நிலவி வருகின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்கும் பண்புகூடத் தெரியாதவராக அந்த இளம் செயலாளர் இருக்கின்றார்.

இதன் காரணமாகப் பல அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறைப்படி செய்ய முடியாமல் திணறுகின்றனர். சில நெருக்குதல்களுக்கு அடிபணிவதா அல்லது சட்டப்படி வேலை செய்வதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் தடுமாறுகின்றனர்.

இத்தகைய நிலையில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டனர். இன்னும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டனர். தொலை தூரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் பிள்ளைகளின் கல்வி போன்ற விடயங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல அதிகாரிகள் மனம் புழுங்கியவாறே சொல்பவற்றைச் செய்து வருகின்றனர்.

அபிவிருத்தி தொடபான கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்குக் கூட அழைக்கப்படுபவர்களின் பட்டியல் ஈ.பி.டி.பி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சில அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடிப்படையில் பொது நிர்வாக சேவை அதிகாரிகளோ, பணியாளர்களோ, அரச அதிபருக்குக் கட்டுப்பட்டவகள். அரச அதிபரை விட வேறு எவரும் அவர்களுக்குக் கட்டளையிட முடியாது. ஆனால், இன்று அரச அதிகாரிகள் பல முனைகளில் நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

நேர்மையாகவும் துணிவுடனும் பணியாற்றும் சில உதவி அரசாங்க அதிபர்கள் பலவித நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபைகள் கூட சரியாகச் செயற்பட முடியவில்லை. அவர்களின் வேலைத்திட்டங்களுக்குப் பிரதேசசபை செயலாளர்களால் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

இன்று ஆளுநரையும், சில அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் முகமாக முறை மீறல்களில் ஈடுபடும் எந்த ஒரு அதிகாரியும் நாளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது பதில் சொல்லியாக வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்படியான ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்கும் ஜனாதிபதி, தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்வாதாக எப்படிக் கூற முடியும்?

வடக்கின் இயல்பு வாழ்வைச் சீர்குலைப்பதில் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வகிப்பவர் வடபகுதியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க.

இவரது அதிகாரத்தில் பாடசாலை விழாக்கள் உட்பட இங்கு நடைபெறும் ஒவ்வொரு வைபவத்திலும் இராணுவப் பிரசன்னம் எழுதப்படாத சட்டமாக்கப்பட்டுள்ளது.

இவரின் அதிகாரத்திலேயே எவ்வித சட்ட வரைமுறையுமின்றி வலி.வடக்கு மக்களின் காணிகள் படையினரால் கையகப்படுத்தப்படுகின்றன. மக்களின் பெறுமதி மிக்க வீடுகள் இடிக்கப்பட்டு வீதிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இராணுவப் பேச்சாளரோ அப்படி எதுவும் நடக்கவில்லை என சளாப்புகிறார். அது மட்டுமின்றிப் பல இடங்களில் பொதுமக்களின் காணிகளைத் தமக்குக் கையளிக்கும்படி படையினர் பிரதேச செயலகங்களை வற்புறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மாவீர அஞ்சலி மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் தொடபாகவும், அவர்களின் கைதுகள், விடுதலை தொடபாகவும் இவர் ஒரு சிவில் அதிகாரி போன்று கருத்துகளை வெளியிட்டார். அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதாகக் கண்டனமும் வெளியிட்டார்.

நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். எமக்கெனச் சில சிறப்புரிமைகள் உண்டு. எமது மக்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அங்கு நாம் நிற்க வேண்டியது எமது கடமை. எம்மை விமர்சிக்க எந்த ஒரு அரச பணியாளர்களுக்கும் அதிகாரம் கிடையாது என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை இராணுவம் பாதுகாப்புப்படை என்ற வகையில் மக்களைப் பாதுகாக்கும் முகமாக, இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்படும் மர்மக் கொலைகள், தாக்குதல்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தவும் சம்பந்தப்பட்டவகளைக் கண்டு பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டால் அதனை வரவேற்க முடியும்.

அரச இயந்திரமும் அரச அதிகாரிகளும் அரச படையினரும் அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகளும் தொடந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களின் நிம்மதியையும் அமைதியையும் குலைக்கும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போதைய இராணுவ நிர்வாகத்தில் அதனையே நாம் எதிபாக்கிறோம்’.

Related Posts