கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் விழிப்படைந்த பொதுமக்கள் இன்று(04) வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை சந்தித்த தமது காணி உறுதிகளை காண்பித்து உறுதிப்படுத்தினார்கள்.
மேலும், தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
வட்டுவாய்க்கால் ஏ1 காவலரண் தொடக்கம் ஏ8 காவலரண் வரை முட்கம்பிகளால் வேலி அடைத்து அதற்குள் யாரும் நுழையாதவாறு கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இரவு பகலாக காவல் காக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த இடத்துக்குள் ஊடகவியலாளர் ஒருவர் சென்று பொதுமக்களின் காணிகளை பார்வையிட்டு அக்காணிகள் தொடர்பாக புகைப்படங்களை எடுத்ததுடன் அக்காணிகள் படையினரின் பயன்பாட்டில் இல்லாது கட்டுப்பாட்டில் மாத்திரமே உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.
எனினும் இந்த காணிளை படையினரும் பயன்படுத்தாமல் பொதுமக்களிடமும் கையளிக்காமல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் குறித்த காணிகளை படையினர் மக்களுக்கு வழங்குவதற்கு முன்வராத காரணத்தை மக்களிடம் கேட்டபோது, இறுதிக்கட்ட போரின்போது, இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் பூதவுடல்கள் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளமையினாலேயே படையினர் காணிகளை தம்மிடம் தரமறுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.