பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமது சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்கள் தமது காணியில் தற்போது வேறு யாராவது குடியிருந்தால், அவர்களை வெளியேற்றி மீள தமது காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கினார்.
எனினும் இதற்கான காலம் ஒரு வருடத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளதால்.இதில் சம்பந்தப்பட்ட மக்கள் தமது கவனத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நீதியமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
ஒரு வருட கால அவகாசமே உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் தமது காணி உரிமைகள் தொடர்பில் விரைவாக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
தற்போதுள்ள ஆட்சியுரிமைச் சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் ஒருவர் ஒரு காணியில் இருந்தால், அதற்கு உரிமைகோர முடியும். யுத்தம் காரணமாக சொந்த இடங்களில் இருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் காணிகளில் வேறு நபர்கள் வசித்து வருவதால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே காணி உரிமையாளர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆட்சியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர சட்ட ஆணைக்குழு 2009 ஆம் ஆண்டே சிபாரிசு செய்திருந்தது. இதற்கமைய ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இச்சட்டத் திருத்தத்துக்கு அமைய காணிகளில் பிரச்சினை உள்ள உரிமையாளர்கள் ஒரு வருடத்துக்கு நீதிமன்றம் செல்ல முடியும் எனவும்அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை! இனியும் ஏன் நில அபகரிப்பு வேலை? சபையில் சம்பந்தன் எம்.பி. கேள்வி