காணாமல் போன மீனவர்கள் எண்மர் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை (29) காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர்.

படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, சக்கோட்டை மீனவ சங்கத்தின் இரண்டு மீனவ படகுகள் தேடுதல் நடத்தியும் காணாமற்போனவர்களை மீட்க முடியவில்லை.

கடற்கொந்தளிப்பால் தேடுதலுக்கு சென்ற மீனவ படகுகளும் மீண்டும் கரைக்கு திரும்பின. இந்நிலையில் இம் மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.

மேற்படி 3 மீனவர்களும் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது தற்காலிகமாக சக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறையை சேர்ந்த ஐவர் மீட்பு

இதேவேளை, மாத்தறை ‘றொட்டஹொட’ பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை 4 மணிக்கு கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, சனிக்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் கடந்த 18ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற டேவிட்சில்வா பிரசாந்த (வயது45), சுமிபால கசித் மதுசாந்த (வயது25), விஜி தனிஸ்ரர் (வயது41), அரியதாஸ் பிரதீப் குமார் (வயது26), சமதாஸ ஜெனக (வயது 35) ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளமையால் இந்த மீனவர்களுடன் 1 றோலர் படகு சேதமடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

மீனவர்களையும் படகினையும் வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர் சங்கத்தினர் மீட்டதுடன் அவர்களுக்கான உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இம் மீனவர்கள் தொடர்பாக மாத்தறை மீனவர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts