வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
நேற்று மாலை கொழும்பு மருதானையில் ,கத்தோலிக்க தேவாலயமொன்றில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த
அமைப்பாளர்களின் ஒருவரான அருட்தந்தை என்.சத்தியவேல் தெரிவித்தார்.
இத்தேவாலயத்துக்குள் பலவந்தமாக நுழைந்த பிக்குகள், வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்தது நாட்டுக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறி, அச்சுறுத்தியாதாகவும் சத்தியவேல் கூறினார்.
இந்த கூட்டத்தின்போது, சட்ட விரோதமான செயல்கள் எதுவும் கூடியிருந்தவர்களால் செய்யப்படவில்லை என்று கூறிய அவர் பிக்குகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு போலீசார் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இது சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பொலிசாரிடம் புகாரொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.