‘காணாமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் சிபாரிசுகள் இன்னமும் கிடைக்கவில்லை. இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்’ என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ரீ.ஆனந்தராஜா தெரிவித்தார்.
யாழிற்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்த ஆணையாளர் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் அரச திணைக்களத்தின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது நாங்கள் இல்லை. அது பொலிஸார் செய்கின்றார்கள். பொலிஸார் அந்த கடமையை சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எமது கடமை’ என்று அவர் தெரிவித்தார்.
‘காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழவின் அறிக்கை இன்னமும் சமர்பிக்கப்படவில்லை. சமர்பிக்கப்பட்ட பின்னர் விசாரணைக் குழவின் சிபார்சுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நிலைகுறித்து தீர்மானிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தர்.
அத்துடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம், சுகாதாரம், வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான விடயங்களில் மனித உரிமை ஆணைக்குழு தனது கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் சிவில் பாதுகாப்பு குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.