மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம் எனும் தொனிப்பொருளில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த அனுரகுமார திசாநாயக்க விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
“நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சாதாரணமான மக்கள் ஒரு ஜனாதிபதி தேர்தலை தமது தேர்தலாக நினைப்பார்கள். ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்பது தெற்கு கட்சிகளிற்குள், அவர்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் என யாழ். மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள்.
சில தருணங்களில் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் பங்களிக்கவில்லை. மற்ற தேர்தலை போல, ஜனாதிபதி தேர்தலில் உற்சாகமில்லை. அது ஏனென்றால், அது உங்களின் பார்வையில் அது தெற்கு கட்சிகளின் பலத்திற்கான போட்டியாகும். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் தலைமைதான் உங்களது, எங்களது தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது.
யுத்தத்தின் போது வடக்கு மக்கள் பிரதானமாக துன்பத்தை அனுபவித்தனர். ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கிடையில் மோதல் இருந்தது. இந்திய ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்டது. யுத்தத்தின் போது இராணுவத்தின் செயற்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டது. எப்போது செல் விழும், குண்டு வெடிக்கும் என்பது தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை இருந்தது.
தெற்கிலிருந்து எம்மால் செய்யப்பட வேண்டியவற்றை செய்யாத குற்ற உணர்ச்சி எம்மிடமுள்ளது. ஆனால், இப்பொழுது இங்கிருந்து எப்படி தொடர்வது? முக்கியமாக யுத்தத்தை மையப்படுத்திய பிரதான பிரச்சினைகளிற்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.
தமது குழந்தை, கணவர் காணாமல் போயுள்ளனர். மரணத்தை விட காணாமல் போனது வேதனையானது என்பதை நாமறிவோம். எனது அண்ணனும் காணாமல் போனவர். எங்களது தாய், தந்தையர் அது தொடர்பாக படும் வேதனை தொடர்பான அனுபவம் எமக்குமுள்ளது.
உங்களது குழந்தைகள், உங்களது கணவர்கள் தொடர்பாக உண்மை நிலையை உங்களிற்கு அறியத்தரும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்ற உறுதிமொழியை தருகிறோம்.
அதேபோல், 20, 30 வருடங்களாக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். வெலிக்கடை சிறைச்சாலையில் என்னை அப்படியான ஒருவர் சந்தித்தார். சிலருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவே 20 ஆண்டுகளிற்கு மேல் சென்றது. ஆனால் அவர் செய்திருக்கும் தவறிற்கு உச்சபட்ச தண்டனையே 7 ஆண்டுதான். அவர் 20 வருடமாக விளக்கமறியலில் இருக்கிறார்.
இந்த நிலையில், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கப்படும் செயற்பாட்டை ஆரம்பிப்போம் என்ற உறுதிமொழியை தருகிறோம்.
அத்துடன், பலாலியை தாக்கும் பாரிய ஆயுதங்கள் புலிகளிடம் இருந்ததால் அன்று பலாலியை சுற்றி பெருமளவு நிலம் அபகரிப்பப்பட்டது. இப்போது யாரிடமும் அப்படியான ஆயுதங்கள் அரசாங்கத்தை தவிர வேறு யாரிடமும் இல்லை.
அப்படியானால் ஏன் அந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. தனது நிலத்தை பெற்றுக்கொள்ளும் நியாயமான உரிமை அந்த மக்களுக்கு உண்டு. அத ஒத்திவைக்க முடியாத பிரச்சினை.
எனவே சரியாக அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட காலத்திற்கு அமைவாக நஷ்டஈடு வழங்கப்படும். உங்கள் நிலம் அரசாங்கத்தால் 30 வருடங்களுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததால் நஷ்டஈடு வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.