காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.எமது பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளரான மரிய ஈஸ்வரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாய் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரை தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு மாலை நேரத்தில் தனது வீட்டுக்கு செல்லும் வழியில், இனந்தெரியாத 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இடைமறித்து தாக்கியதுடன் இந்த போராட்டத்தில் இதற்கு பின்னர் கலந்துகொண்டால் கணவருக்கு இடம்பெற்ற நிலையே பிள்ளைகளுக்கும் இடம்பெறும் என அச்சுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாங்கள் இன்று (நேற்று முன்தினம்) கொழும்புக்கு வந்து எமது கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக தென்னிலங்கை எமது உறவுகளுக்கு தெரியப்படுத்த முன் வந்துள்ளோம். ஆனால் நாங்கள் மீண்டும் எமது வீடுகளுக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு எமது போராட்டத்துக்கு இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. அத்துடன் எமது உறவுகளை தேடும்போராட்டத்தில் அரசாங்கத்தின் எந்த பாதுகாப்பும் எமக்கில்லை. அரசாங்கம் அமைத்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கண்டறியும் அலுவலகத்துக்கு சாட்சியமளிக்க வருபவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எந்த உத்தரவாதத்தையும் இதுவரை அளித்ததில்லை.
அத்துடன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்களை மீள எம்மிடம் ஒப்படைக்குமாறே நாங்கள் போராடுகின்றோம். இந்நிலையில் எமக்கும் எமது உறவினர்களுக்கும் இனந்தெரியாதவர்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உத்தரவாதம் என்ன என்று கேட்கின்றோம் என்றார்.