காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரி அவர்களது உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வீதியில் தொடர்ந்து நடத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆலய வீதியை போராட்டம் நடத்த வழங்க முடியாதுள்ளதாகவும் அதற்கான காரணத்தையும் நிர்வாக சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்றுக் கடிதம் மூலம் அறிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் ஒரு பக்க வீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போராட்டம் நேற்றுடன் 203 நாள்களை எட்டியுள்ளது. இந்த நிலையிலேயே ஆலய நிர்வாகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஆலய நிர்வாகத்தின் கடிதத்தில், “ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஆலயத்தில் தொடர்ந்து விழாக்கள் இடம்பெற உள்ளன.
கோயில் வீதியைப் போராட்டம் செய்வதற்கு வழங்க முடியாதுள்ளோம் என்று மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாக தலைவர் தவிர்ந்த ஏனைய பொறுப்பதிகாரிகளும் நிர்வாக சபையின் உறுப்பினர்களுமாக 13 பேர் கடித்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்தின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்டச் செயலர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சிப் பிரதேச செயலர், கிளிநொச்சி நகர கிராம அலுவலர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.