காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
அந்த விமானம் தொடர்பான எந்தத் தகவலையும் மலேசிய அதிகாரிகள் மறைக்கவில்லையென்றும் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
239 பேருடன் காணாமல் போன அந்த விமானத்தைத் தேடும் பணியை தொடர்ந்து நடத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் நகருக்குச் செல்ல வேண்டிய மலேசிய ஏர்லைன்சின் போயிங் 777 ரக விமானம் காணமல் போனதன் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்ல வேண்டிய அந்த விமானம் காணமல் போனது.
அந்த விமானம் காணாமல் போனது குறித்த இடைக்கால அறிக்கையை மலேசிய நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிடவிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் காணாமல்போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கான சர்வதேசக் குழுவுக்கு ஆஸ்திரேலியா தலைமை வகிக்கிறது.
60,000 சதுர கி.மீ. அளவிலான பகுதிகளில் தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் தேடுதல் பணிக்குத் தேவைப்படும் 61 மில்லியன் பவுண்டு செலவை ஆஸ்திரேலியாவும் மலேசியாவும் பகிர்ந்துகொண்டுள்ளன.
இம்மாதிரி விமானங்கள் காணாமல் போகும் நிலையில், நீண்ட தூரம் செல்லும் விமானங்களைக் கண்காணிக்க புதிய முறையைக் கையாளப் போவதாக ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் இவ்வாரத் துவக்கத்தில் அறிவித்தன.
இந்தப் புதிய முறைப்படி விமானங்கள் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை கண்காணிக்கப்படும். தற்போது 30-40 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்படுகிறது