காணாமற்போன பெண் மயங்கிய நிலையில் மீட்பு

கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் இன்று கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

thumpalai-women

புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்தே இவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்து மயானத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலமொன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்னை மீட்டுள்ளனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி பெண்ணின் வீட்டிற்கு கடந்த 3 ஆம் திகதி காலையில் சிவிலில் வந்த மூவர், தாங்கள் காங்கேசன்துறைப் பொலிஸார் என்று அடையாளப்படுத்தியதுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் செல்வதாகக்கூறி சென்றுள்ளார். அன்று மாலை வரையும் வீடு திரும்பாததினையடுத்து, உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கேட்டபோது, பொலிஸார் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரவும் இல்லை, குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு வரவும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்னைக் காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையிலே குறித்த பெண் புதன்கிழமை (07) காலை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts