காணாமற்போன உறவுகள் மீண்டும் வரவேண்டும் – அனந்தி

சரணடைந்து காணாமற்போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்
என்றும் நல்லூரில் தான் பிரார்த்தித்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ananthy

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு சரணடைந்து காணாமற்போன உறவுகள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டு சிதறுண்டு அதில் மரணித்தோமோ அதேபோல அதற்கு காரணமானவர்களும் அவ்வாறு சிதறி போகவேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகவே இந்த கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டோம்’ என்றார்.

‘இந்த நாள் தான் எங்களின் அந்த வாழ்கையை தொலைத்த நாள். அன்றைய தினம் சுமார் 8 மணியளவில் என்னுடைய கணவரை பிள்ளைகளுடன் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் நான் கையளித்திருந்தேன்.

ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் என்னுடைய கணவர் எங்கே இருக்கின்றார் என்று கூட தெரியாமல் அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்ற நிலைமையில் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றேன். முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழிபாட்டில் ஈடுபட்டேன். அடுத்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தேன். இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்தேன்.

இந்த நாடு இறைமை உள்ள நாடு, ஜனநாயகம் நிலவுகின்ற நாடு என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டு இருக்கின்ற அதேவேளை இங்கே கண்ணீருடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts