கண்ணகி சிலம்பை வைத்து மதுரையை எரித்தது போல, காணாமற்போனோர் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சிந்திய கண்ணீரே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இல்லாமல் ஆக்கியதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொது நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற புதிர் எடுத்து பொங்கல் நடத்தும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
காணாமற்போனோரின் மனைவிகள் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் நின்று கதறினர். அவர்களின் தாய், தந்தை உறவினர்களும் கதறினர். அவர்களின் கதறல்களை மஹிந்த ராஜபக்ஷ ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
இருந்தும் அந்தக் கண்ணீரின் பலம் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு நல்ல பாடம் புகட்டியது. ஆயுதத்தால் போராடியவர்களை இல்லாது ஒழித்துவிட்டோம், தமிழர்களை இனி அடக்கி ஆளமுடியும் என நினைத்த மஹிந்தவை, பேனா என்னும் ஆயுதத்தால் வாக்குகள் மூலம் இல்லாது ஆக்கினோம்’ என்றார்.