ஓமந்தையில் இராணுவ வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச் சிப்பாயிடம் கேட்டிருந்தேன். அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல்போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையிலேயே காணாமல் போனோரின் உறவுகள் இவ்வாறு சாட்சியமளித்தனர். கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த குறித்த தாய் காணாமல்போன பத்மநாதன் சுலக்ஸன் (வயது 17) என்ற மகன் தொடர்பில் சாட்சியமளிக்கையில்-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த எனது மகனை கடந்த 2008ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களிடமிருந்து மீண்டு வந்த எனது மகன் எங்களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அமைப்பினர் மீண்டும் எனது மகனைப் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் இறுதி யுத்தம் ஆரம்பமானதையடுத்து நாங்கள் குடும்பமாக இடம்பெயர்ந்த நிலையில் நான்கு நாட்கள் வட்டுவாகலில் முள்வேலி சுற்றப்பட்ட பகுதிக்குள் தங்கவைக்கப்பட்டிருந்தோம். இதனையடுத்து நாங்கள் குடும்பமாக ஆனந்தகுமாரசுவாமி முகாமுக்கு மாற்றப்பட்டோம்.
இதேவேளை எனது மகன் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதை பார்த்ததாக எனது உறவினர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்நிலையில் அவரை மீட்பதற்காக பல இடங்கள் தேடிஅலைந்தேன். எனினும் இன்றுவரை எனது மகன் கிடைக்கப் பெறவில்லை.காணாமல் போன மகனை மீட்டுத்தருமாறு குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் எனது மகனை அவர்கள் மீட்டுத்தரவில்லை. எனினும் உயிரோடுள்ள எனது மகனை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தரும் என்ற அசையாத நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
இராணுவத்தினரிடமே கணவனை ஒப்படைத்தேன் மனைவி சாட்சியம்-
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன். அதன் பின்னர் வவுனியா யோசப் மற்றும் பூசா முகாங்களில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கு ஒட்டப்பட்டிருந்த பெயர் விபரங்கள் மூலம் அறிந்து கொண்டேன் என காணாமல்போன செல்லையா விஸ்வநாதன் (வயது 47) என்பவரின் மனைவி சாட்சியமளித்தார்.
அவர் மேலும் அங்கு சாட்சியமளிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்த எனது கணவரை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது இரண்டு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன். பாதிரியார் பிரான்சிஸூடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் எனது கணவரையும் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றனர். அதன் பின்னர் எனது கணவர் வவுனியா யோசப் மற்றும் பூசா முகாங்களில் உள்ளதாக அறிந்திருந்தேன். எனினும் அவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. எனது கணவரை மீட்பதற்காக பல இடங்கள் தேடி அலைந்து தற்போது 7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கணவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆணைக்குழு எங்களிடம் மட்டுமே விசாரணைகளை மேற்கொள்கின்றது. எனது கணவர் காணாமற்போனமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கலும் மேற்கொண்டுள்ளேன். இத்தனை விடயங்களை மேற்கொண்டும் இதுவரை எனது கணவரை விடுவிக்காமல் தடுத்து வைத்துள்ளார்கள். தயவு செய்து உயிருடன் உள்ள எனது கணவரை விட்டு விடுங்கள் என அவர் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
இராணுவப் பேருந்திலேயே எனது மகனை இறுதியாகக் கண்டேன் தாய் சாட்சியம்-
இராணுவத்தினர் எனது மகனை பேருந்தில் ஏற்றிச் செல்வதை ஓமந்தைப் பகுதியில் வைத்துக் கண்டிருந்தேன். அதன் பின்னர் அவரை இன்றுவரை காணவில்லை என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார். கிளிநொச்சி விவேகானந்த நகரை சேர்ந்த காணாமல் போன இராஜசட்னம் ஜெயராஜ் ( வயது 28) என்பவரின் தாயார் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.அவர் மேலும் சாட்சியமளிக்கையில்-
கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முள்ளிவாய்காலில் இருந்து எங்களை இராணுவத்தினர் பேருந்துகளில் ஏற்றி ஓமந்தைக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர். இதன்போது மற்றுமொரு பேருந்தில் சில இளைஞர்கள் ஏற்றி வரப்பட்டு நாமிருந்த பகுதியில் இறக்கி விடப்பட்டு மீண்டும் அங்கு நின்ற இராணுவத்தினர் பிறிதொரு பேருந்தில் அவர்களை ஏற்றினார்கள். இவ்வாறு ஏற்றும் போது எனது மகனும் அங்கு காணப்பட்டிருந்தார். அதுவே எனது மகனை பார்த்த கடைசி நாளாகும். எனது மகனை அவ்வாறு கண்ட நிலையில் எனது மகனுடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவ சிப்பாயிடம் கேட்டிருந்தேன். இதன்போது அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்ததுடன் விசாரணைகளின் பின்னர் எனது மகனை இராணுவத்தினர் விடுவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை. எனது மகனை இராணுவம் எதற்காக இன்று வரை தடுத்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கவில்லை. எனவே தயவு செய்து எனது மகனை விட்டு விடுங்கள் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் தொடர்ச்சியாக எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.