காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார்.
அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கல்லூரிக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். குறித்த போராட்டத்தில் புனித பத்திரிசிரியார் கல்லூரியின் முன்னாள் அதிபரான அருட்தந்தை பிரான்சீஸ் காணாமல் ஆக்கப்பட்டு உள்ள நிலைமையில் அவர் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் பழைய மாணவர்கள் சிலர் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் ஜனாதிபதி குறித்த போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
அந்நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பழைய மாணவர்கள், நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி நிர்வாகம் சார்ந்த எவரும் தமது கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்சீஸ் காணாமல் ஆக்கப்படமை தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்து இருக்கவில்லை. ஆனாலும் கல்லூரிக்கு புதிதாக நீச்சல் தடாகம் அமைத்து தர வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் கோரி இருக்கின்றார்கள். இது எமக்கு மிகுந்த மனவேதனையை தந்துள்ளது என தெரிவித்தனர்.