காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழ மட்டுமே 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ரொக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசுவதை பாலஸ்தீன ஆயுததாரிகளும் தொடர்ந்துவருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதற்காக எகிப்து வந்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, காசாவிலிருந்து வீசப்படுகின்ற ரொக்கெட்டுகளில் தம்மைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் செய்வது பொருத்தமான, நியாயமான முயற்சி என்றாலும் அதற்காக மனித உயிர்களில் கொடுக்கப்படும் விலை அமெரிக்காவுக்கு ஆழ்ந்த கவலையை தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனை சந்தித்த பின்னர் கெர்ரி இக்கருத்தைத் தெரிவித்தார்.
உடனடிப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்புக்குமிடையே போர்நிறுத்தம் கொண்டுவருவதில் பிராந்திய நாடுகள் முக்கியமான பங்காற்ற முடியுமமென்று பான் கி மூன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.