காசாவில் இஸ்ரேல் ‘போர்க் குற்றங்கள்’ புரிந்திருக்கலாம்- நவி பிள்ளை

காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

gaza_explosion

இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில், சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள அவர், அது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்த அளவுக்கு துச்சமாக மதிக்கப்பட்டன என்பதை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் வெளிக்காட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தத் தாக்குதலில், காசாவின் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு சிறார்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டது போலத் தெரிகிறது.

அதேநேரம், வகைதொகையின்றி ஹமாஸ் நடத்தும் ராக்கெட் வீச்சுக்களையும் அவர் கண்டித்துள்ளார்.

நவி பிள்ளையின் கருத்துகள் முற்றாக ஆராயாமல் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் என்று கூறியுள்ள இஸ்ரேலியப் பிரதிநிதி, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

காசா நிலப்பரப்பின் தென் பகுதியில், இஸ்ரேல் தொடந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் பீதியோடு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேலிய எல்லையை ஒட்டியுள்ள நகரமான கூசாவிலிருந்து மற்றும் 4000 பேர் வெளியேறியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts