காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக, எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்தோ, லங்கா படகுச்சேவை தனியார் கம்பனியின் நிர்வாக பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் இதுபற்றித் தெரிவித்தார்.
அத்துடன் பயணிகளுக்கு அறவிடப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் படகுச் சேவை, தற்போது சீராக இயங்குகிறது. இப்படகு சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.
சிவகங்கை பயணிகள் கப்பல் 2023 ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்குமிடையேயான தனது படகு சேவையை ஆரம்பித்தது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 2024 ஒகஸ்ட் (16) இதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான பிரயாணச் சீட்டுக்களை இணையம் மூலம் பதிவு செய்யலாம். படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடு செய்ய இந்திய அரசு ஒரு வருடத்துக்கு 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.