காங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்தார்.
அத்துடன் இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கி எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தித் திட்டத்தை நிறைவுச்செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொருட்டு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டார்.
இத்துறைமுக அபிவிருத்தியூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் அபிவிருத்திச் செய்யப்படுவதுடன் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் 8 மீட்டர் வரையில் துறைமுகம் ஆழப்படுத்தப்படுவதோடு அலை தடுப்பணை புதிதாக அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஒரு கப்பல் உள்நுழைவுப் பாதை புனரமைக்கப்படுவதுடன் மேலுமொரு பாதை புதிதாக நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இலங்கை துறைமுக அதிகார சபையானது ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை 15 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.