காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் விரைவில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக காணியை அரசுடைமையாக மாற்றி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதோடு, இவர்களில் 11 ஆயிரம் குடும்பங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் மாதம் வரை இரண்டு இலட்சத்து 51 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இக்குடும்பங்களில் 11 ஆயிரம் குடும்பங்கள் யாழ் மாவட்டத்திலேயே இருக்கின்றனர். தற்போது யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 109 குடுமப்ங்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர்.

இவர்களில் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக அறிக்கையிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களின் ஊடாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியை அடையாளம் கண்டுள்ளனர். குறித்த இடத்தில் யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தில் காணப்படுகின்ற 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள்குடியேறற முடியும்.

எனவே குறித்த காணியை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத கலாசார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது – என்று தெரிவித்தார்.

இதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக, தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தை எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான அனைத்து பணிகளையும் ஊடகத்துறை அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

Related Posts