அரசின் காணி சுவீகரிப்பு செய்தி ஆச்சரியத்தை அளிக்கின்றது-ஆனந்தசங்கரி

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஹெக்டேர் காணியை மீளக்குடியேற்றத்திற்காக அரசு சுவிகரிக்கும் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த யோசனை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமையவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மிகவும் சிறந்த, நேர்மையான, தகுதிவாய்ந்த சிறப்பாக சேவையாற்றக் கூடிய ஒருவர். எவருடைய சிபாரிசிகளுக்கமையவும் அவர் நியமிக்கப்படவில்லை. அதற்கான முழுத் தகுதியும் அவருக்கு இருக்கின்றது. எனவே அதன் அடிப்படையில் எனது ஆலோசனையையும் முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

சீமெந்து தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருளான சுண்ணாம்புக் கல் அந்த இடத்திலே அதிகமாக காணப்பட்டதாலேயே, சீமெந்து தொழிற்சாலை அன்று உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் கல் அகழ்வதால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த இடம் தனிச்சிறப்பும், ஒரு முக்கியத்துவமும் வாய்ந்த ஒரு பகுதியாகும். எனவே அந்த இடத்தில் பலபேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வேறு ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் பலர் பயன் பெறுமளவிற்கு அந்த இடத்தை பயன்படுத்தலாம்.

இடம் பெயர்ந்த மக்கள் ஏற்கனவே தாங்கள் வாழந்த இடத்தில்தான் மீளக்குடியேற விரும்புகின்றனர். அது மட்டுமல்ல, அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தனது ஜப்பான் விஜயத்தின் போது, வடக்கு மக்கள் கோருவது அரசின் காணிகளை அல்ல, தாம் வாழ்ந்த சொந்த காணிகளையே என அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகள் மத்தியில் கலந்துரையாடும் போது தெரிவித்துள்ளார். காணியற்றவர்களுக்கு அந்த காணி பகிர்ந்து அளிக்கப்படப்போகின்றதா அல்லது இராணுவம் ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கும் காணிக்கு பதிலாக அது கொடுக்கப்படப் போகின்றதா என்ற விபரம் தெரியவில்லை. எது எப்படியோ மேற்படி சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணி ஒரு வரலாற்றோடு சம்மந்தப்பட்ட இடம் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடாநாட்டில் எவ்வளவோ நல்ல வளமான இடங்கள் இருக்கின்றன. காணியற்றவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான விவசாயம் செய்கை பண்ணக்கூடிய காணியில்தான் குடியேற்றப்படவேண்டும். சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் விவசாயம் மேற்கொள்ளமுடியாது என்பது மட்டுமல்ல, அது சுண்ணாம்பு கற்பாறைகள் நிறைந்த பூமியாகும். அதை அமைச்சர் அவர்கள் கவனத்தில் கொள்வார் என நினைக்கின்றேன். மேலும் இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டு அந்த மக்களுக்கே கையளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்

Related Posts