காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காங்கேசன்துறை தல்செவன உல்லாச விடுதிக்கும் ஊறணியில் கையளிக்கப்பட்ட தற்காலிக இறங்குதுறைப் பிரதேச கடறரைக்கும் இடையிலேயே குறித்த 29 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குவாதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் உள்ள காணிகளை விடுவித்தால் 250 மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தினர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவை சந்தித்து குறித்த காணிகளை விடுவிப்பது குறித்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.