வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.
மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கு வடமாகாணத்தில் இதுவரை ஒரு தொழிற்சாலை இல்லாமல் இருந்தது.
இதைக் கருத்திற்கொண்டே பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சி மையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கென ஏறத்தாழ 8 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. இந்நிதியில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை 5.5 மில்லியன் ரூபாவைக் காசாக வழங்குவதோடு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியில் பிளாஸ்ரிக் மீள்சுழற்சிக்கான இயந்திரத் தொகுதிகளையும் கொள்வனவு செய்து வழங்குகிறது. யாழ் மாநகர சபை 0.79 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஒதுக்கிய நிதியில் இருந்து முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் யாழ் மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதனிடம் கையளித்துள்ளார்.
யாழ் மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவத்தின் திட்ட இயக்குநர் பந்துல சரத்குமார, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் விஐpதா சத்தியகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நான்கு மாதங்களில் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்தின் கட்டிட நிர்மாணப் பணிகள் யாவும் முடிவடைந்து மீள்சுழற்சிப் பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.