Ad Widget

காக்கைதீவில் கழிவுநீர் பரிகரிப்பு நிலையம்:அமைச்சர் ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டி வைத்தார்

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில் இருந்தும் கழிவுநீர்த்தாங்கிகளின் மூலம் எடுத்து வரப்படும் கழிவுநீர் இதுவரையில் கல்லுண்டாய்ப் பகுதியில் உரிய முறையில் பரிகரிக்கப்படாமலேயே கழிக்கப்பட்டு வந்தது. இதற்குரிய பரிகரிப்பு இயந்திர வசதி மாநகரசபையில் இல்லாததே இதற்கான காரணமாக அமைந்தது. பலரும் இதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதையடுத்தே யாழ் மாநகரசபையினது நிதியிலிருந்தும் உள்ளுராட்சி அமைச்சின் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தற்போது கழிவுநீர்ப் பரிகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 30 ஆயிரம் இலீற்றர் வரையான கழிவுநீரே யாழ் மாநகரசபைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படுகிறது. எதிர்காலத்தில் சுற்றுலா காரணமாக விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 50 ஆயிரம் இலீற்றர் கழிவுநீரைப் பரிகரிக்கக்கூடிய வகையிலேயே இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வெளியேறும் நீர் இந்நிலையம் அமையவுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் தென்னந்தோட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும், திண்மப்பொருட்கள் சேதனப்பசளைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அமையவுள்ள இந்நிலையத்தின் கட்டுமானப்பணிகள் நான்கு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், யாழ் மாநகரசபைப் பொறியியலாளர் இ.சுரேஷ;குமார், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அ.பிரபாகரன் உட்ப்பட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.

01

03

05

06

07

Related Posts