கஸ்ட்ரோவின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுதாபம்

இருபதாம் நூற்றாண்டில் உருவான புரட்சியாளரான கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோவின் மறைவின் மூலம் இலங்கை நெருங்கிய நண்பரொருவரை இழந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நட்புறவு நிலவிவருகிறது. அது அணிசேரா இயக்கத்தின் பெறுமதி மற்றும் மனித அபிவிருத்திக்காக இருநாடுகளும் காட்டும் பொதுவான அர்ப்பணிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கவலைக்குரிய சந்தர்ப்பத்தில் தனிப்பட்டமுறையில் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆழ்ந்த அனுதாபங்களை கியூபா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் கஸ்ரோ குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுத்தலைவரை இழந்து ஆழந்த துக்கத்தில் மூழ்கியுள்ள அந்நாட்டு மக்களுடன் தானும் இலங்கை மக்களும் கைகோர்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிடல் கஸ்ட்ரோவின் மறைவையொட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்

1959 ஆம் ஆண்டு முதல் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் பிடல் கஸ்ட்ரோ இலங்கைக்கு வழங்கிய ஆதரவு பாராட்டத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவிற்கும் பிடல் கஸ்ரோவிற்கும் இடையிலிருந்த நெருங்கிய நட்பை பிரதமர் சுட்டிக்காட்டிய பிரதமர். தனது கொள்கைகளுக்காக முன்னின்ற கஸ்ட்ரோ எங்கோலா மற்றும் தென்னாபிரிக்காவின் சுதந்திர போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். இலங்கையுடன் தூதரக உறவுகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் வழங்கிய ஆதரவையும் பாராட்டுவதற்கு இதனை சந்தர்ப்பமாக கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கஸ்ட்ரோ வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார துறைகளில் புரட்சிகரமான திட்டங்களை மேற்கொண்டார். பிடெல் கஸ்ட்ரோவின் சமூக கொள்கைகளை என்றும் பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Posts