கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான்?

தற்போது `துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அதனைதொடர்ந்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்ராகா எண்டெர்டைன்மெண்ட் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக, ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

தமிழில் ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்புவை நடிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்புவும், கவுதம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தெலுங்கு நடிகர் சார்பில், சாய் தரம் தேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அனுஷ்கா, தமன்னா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் 3வது நாயகியாக நிவேதிதா தாமஸை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 4 நண்பர்களுக்கிடையே நடக்கும் நட்பை மையக்கருவாகக் கொண்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது. எனினும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

`எனை நோக்கி பாயும் தோட்டா’, `துருவ நட்சத்திரம்’ படங்களை முடித்த பின்னர், கவுதம் இப்படத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்க உள்ளார்.

Related Posts