சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி!

velvi 3நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் வேள்வி நாளை நடைபெறவுள்ளது.

தலைமுறை தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளாக கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகபலி வேள்வி இடம்பெறுவது வழக்கம்.

கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் மிருகபலி வேள்வி இடம்பெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்களை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மிருகபலிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதனையடுத்து அதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதன்படி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய முறைப்படி வேள்வியினை மேற்கொள்ள முடியும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து உரிய சட்டவிதிகளுடன் வேள்விக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாளை காலை 4மணிக்கு வேள்வி ஆரம்பமாகும் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த 300 ஆண்டுகளாக நாம் பரம்பரை பரம்பரையாக வேள்வியை செய்து வருகின்றோம். இது எங்களது சமயநம்பிக்கை. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தினால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேள்வி செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் வியாபாரநோக்கத்திற்கான இந்த வேள்வியை செய்வதில்லை. 5 இலட்சம் பெறுமதியான ஒரு கடா ஆடுகள் வெட்டப்பட்டால் அவற்றின் இறைச்சி 80ஆயிரமோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ தான் விற்கப்படும்.

இது வியாபாரம் அல்ல நேர்த்திக்கு செய்யப்படுவது. வேள்விக்கு என யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானவர்கள் வருவார்கள். அதனைவிட வேள்விக்காகவே வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர்.

இவ்வாறு இருக்கும் போது எமது பரம்பரை வழிபாட்டை மாற்றமுடியும்? அத்துடன் ஒரு மாதத்திற்கு முன்னரே சுகாதார பொதுப்பரிசோதகரின் அனுமதிக்கும் கடிதமூலம் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு இவர்கள் பலியிடுவதற்கு எதிராக வழக்கு தொடருவதாயின் ஆலயத்தில் விளக்கு வைக்கப்பட்டு திருவிழா ஆரம்பிக்க முன்னரே வழக்கு தொடர வேண்டும். ஆனால் இம்முறை விளக்கு வைக்கப்பட்டு வேள்விக்கான ஆயத்தங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே வழக்கு தொடரப்பட்டது. அதன்காரணமாக எங்களால் எதுவும் செய்ய முடியாது வேள்வி நடத்தப்பட்டே ஆகவேண்டும்.

எனவே நாளை காலை 4 மணிக்கு திட்டமிட்டபடி எந்ததடைகளும் இன்றி வேள்வி நடைபெறும் என்றார்.

Related Posts