கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டு சிறுமி கொலை – சட்ட மருத்துவ அதிகாரி

“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளது” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சட்ட மருத்துவ அதிகாரி மயூரதன் தலைமையில் மருத்துவ பீட மாணவர்களின் முன்பாக உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் கொலைகாரருக்கு இருந்திருக்கவில்லை என்பது பரிசோதனையின் மூலம் உறுதியாகிறது. சிறுமியைக் கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது” என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் போது, தெரிவிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts