களனி பல்கலை மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்!

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்துப் பீடங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழக விடுதியில் ஒருவகை நோய் மாணவர்களுக்குப் பரவியுள்ளது. இதனால் 80 மாணவர்கள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நேற்று முன்தினம் முதல் மே மாதம் 3ஆம் திகதி வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. மே மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக உபவேந்தர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எனினும், ராகம மருத்துவபீடம் வழமை போன்று இயங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக விடுதியிலுள்ள அனைத்து மாணவர்களும் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த நோய்க்கு காரணம், உணவா அல்லது குடிதண்ணீரா அல்லது வேறேதுமா எனும் சந்தேகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக குடிதண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Posts