யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது.
விடிகாலையில் சற்று அமைதியான நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தற்போது களம் சூடு பிடிக்கிறது.
பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தற்போது அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பொதுமக்கள் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பின்னிரவில் ஆரம்பித்த போராட்டம் இரவிரவாக நீடித்தது. மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் இரவிரவாக- களத்தை விட்டகலாது- பல்கலைகழகத்தின் நுழைவாயிலிற்கு எதிராகவே உட்கார்ந்திருந்தனர்.
இனத்துரோகம் செய்யாதே, துணைவேந்தரே வெளியே வா, இராணுவமே வெளியேறு, இராணுவம் உள்ளே, மாணவர்கள் வெளியே போன்ற கோசங்களை எழுப்பியபடி, போராட்டக்காரர்கள் களத்தை விட்டகலாது தொடர்ந்து அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்கள்.