Ad Widget

கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதனாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஜனாதிபதி

கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்டத்திலுள்ள புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்றமுன்தினம் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 375 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டிருந்த யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே, நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு இன்றும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த யாழ்ப்பாணத்து ஆசிரியர் பாரம்பரியத்தை மீள் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஆசிரியர்கள் சேவைகள், நாடளாவிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் மிகவும் கௌரவத்துடன் பார்க்ப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்தப் பொறுப்பை யாழ். ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றியிருந்ததாக தெரிவித்தார்.

மேலும் தான் படித்த கொழும்பு றோயல் கல்லூரியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்ததாகவும், அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண ஆசிரியர்களின் விசேடமான அர்ப்பணிப்பின் காரணமாகவே, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியர்கள் குறித்து சமூகத்தில் பேசப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் பாரம்பரியம், நாட்டின் ஆசிரிய சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும், கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறித்த நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை இதன்போது வழங்கியிருந்தார்.

மேலும் இந் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Related Posts