கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கூட்டம்

8523559266_64fcb6d9f4வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் கடந்த இரண்டாம் திகதி நடைபெற்றது.

இதில் வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு ஆலோசனைகளும் பெறப்பட்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஆசிரிய இடமாற்றம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட கொள்கை ஒன்றினை அமுல்படுத்துவதுடன் ஆசிரியவளப் பங்கீட்டினை சீர்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ஆசிரிய நியமனம் பெற்றோர் கல்வி திணைக்களங்களில் ஏனைய பதவிகளை வகிப்பார்களாயின் அவர்களை உடனடியாகவே ஆசிரிய வெற்றிடமுள்ள பாடசாலைகளில் சேவைக்கு நியமிப்பதென்றும் வடமாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளின் மேலதிக ஆசிரிய வளம் குறித்து மத்திய கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி உரிய முடிவினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைத்தல், தேசிய கொடி ஏற்றல், மற்றும் அணிவகுப்பு என்பன முறைப்படி இடம்பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பாடசாலை நேரத்தில் அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டதை உறுதிசெய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராஜா, வடமாகாணத்திலுள்ள வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

Related Posts