வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் வடமாகாண பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாணத்தின் நெடுங்கேணி, செட்டிகுளம் ஆகிய கோட்டங்களிற்கு வெற்றிடமாகவுள்ள கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு III(பொது) ஐச் சேர்ந்தவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் வட மாகாண கல்வி வலயங்களில் வெற்றிடமாகக் காணப்படும் உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவிகளுக்கு கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 1 2:1 பதவிகளில் உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விரும்புவோர் தங்களது கல்வி வலயங்களில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தென்மராட்சி வலயக் கல்விப் பிரிவில் உடற்கல்வி, முறைசாரக்கல்வி, தொழில்நுட்பம் ஆகிய பாடங்களிற்கும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆங்கில பாடத்திற்கும், மன்னார் கல்வி வலயத்தில் ஆங்கில பாடத்திற்கும், தீவகக் கல்வி வலயத்தில் தமிழ், விஞ்ஞானம் ஆகிய பாடங்களிற்கும், துணுக்காய் கல்வி வலயத்தில் விஞ்ஞானம், ஆங்கிலம், முறைசாராக்கல்வி ஆகிய பாடங்களிற்கும், மடு கல்வி வலயத்தில் தமிழ் பாடத்திற்கும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.