கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் அனைவரும் 4 வருடங்களில் பட்டதாரிகளாகவே வெளிவருவார்கள். இதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுபவர்களும் இஸட் ஸ்கோர் அடிப்படையிலேயே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர்களும் ஆசிரியர் தொழில் மீது ஆர்வம் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமல் கல்வியியற் கல்லூரிகளில் இணைந்து கொண்டனர்.
பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் ஒருவர் 4 வருடங்களில் பட்டதாரிகளாக வெளிவரும்போது கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுபவர் மட்டும் பட்டதாரியாக வெளிவர முடியாத நிலை இருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டு இனிவரும் காலங்களில் அவர் பட்டதாரியாகவே வெளிவரவுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகளில் கல்விசார் ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் 2015 ஜனவரி மாதமாகும் போது இவை முற்றாக நீக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டார்.