கல்லுண்டாய் வெளியில் ஒருவித நோய் தொற்று மக்கள் அவதி; கால்நடைகள் இறப்பு

யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக தென்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிர ங்கு போன்ற நோய் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அத்துடன் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய்த்தொற்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தாக்கத்தால் தொண்டை, வாய் என்பன பாதிக்கப்பட்டு மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்லுண்டாய் பகுதியில் பெருமளவு கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையிலும் சீரான கழிவு முகாமைத்துவம் இன்மையால் அப்பகுதி முழுவதும் கழிவுகள் பரவி காணப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள வீதியால் சென்று வர முடியாத நிலையில் பொதுமக்கள் தமது பயணத்தினை பெரும் அவதியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் நாளுக்கு நாள் தாம் இறந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். துர்நாற்றம் மற்றும் இலையான் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

இதனால் நாளுக்கு நாள் தமது உடல்களில் பாரிய மாற்றங்களை உணர்வதாகவும் உடலில் பலத்தினை இழந்து வருவதாகவும் தெரிவித்ததுடன் சிறு பிள்ளைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அண்மை காலத்தில் திடீர் திடீரென இறந்து போகின்றன. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட கால முறையில் தமக்கு பாரிய நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.இந்த விடயம் தொடர்பாக சுகாதார துறையினரை விசாரித்த போது, அப்பகுதியில் இவ்வாறான தோல் மற்றும் சுவாச நோய்கள் ஏற் படுவதற்கான வாய்ப்புக்கள் 90% காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த விடயம் பாரதூரமாக மாற்றம் அடையும் என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உடனடியாகவே களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நோய் தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்துமாறு சுற்றுச் சூழலியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts