அம்பாறை – கல்முனை – சாய்ந்தமருதுவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் வீட்டிலிருந்த நிலையில் குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பெண் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால் கைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆதாரமாகக் எட்டாம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி நிலையில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்ணின் கடத்தலோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரான பெண்ணின் முன்னாள் கணவர் யாழ்ப்பாண மறைந்திருப்தாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடத்தப்பட்ட பெண்ணும் முன்னாள் கணவரும் மீட்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பெண்ணின் முன்னாள் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.