கலை நிகழ்ச்சிக்காக ஒரு நிமிடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபா செலவிட்ட கோத்தபாய!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு கோடி எழுபத்தாறு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி மாலை 5.30 முதல் 7.50 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரபல பாடகர் பாதிய ஜயகொடிக்கு சொந்தமான போட்சூன் என்டர்டையின்மன்ட் நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்விதமான விலை மனுக் கோரல்களுக்கும் இன்றி நேரடியாக இந்த நிறுவனத்திற்கு கலை நிகழ்ச்சிகளையும் ஆரம்ப நிகழ்வுகளையும் நடாத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு செலவு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பணத்தில் நடன நிகழ்வு ஒன்றிற்கு பெருந்தொகை பணம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

பிரபல நடனக் கலைஞர்களான சன்ன மற்றும் உபுலி ஆகியோர் அண்மையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பெல்லன்னவில அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வு குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் பிரபல பாடகர்களான பாதிய சந்தோஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts