“அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தனியே அரசியல் ரீதியிலான விடுதலை மட்டுமல்லாது, போதைவஸ்தில் இருந்தும் மதுபாவனையில் இருந்தும் எங்கள் குடும்பங்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த மாணவ சந்ததி, இவற்றைக் கிரகித்துக் கொண்டு, ஒழுக்கமுள்ள சந்ததியாக, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்ச்சியைக் கொடுக்க வ்வேண்டும். மதுவுக்கு எதிராகவும் போதைவஸ்துக்கு எதிராகவும் அவர்கள் கிளர்ச்சி செய்யவேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலத்தில், வட மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மேற்கூறப்பட்ட கருத்தை, மாவை சேனாதிராஜா வெளிப்படுத்தியிருந்தார்.
நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வில், மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“பெண் தலைமைத்துவத்தைக் கொண்டு வாழ்பவர்கள் இந்த வழிநடத்தலைச் செய்ய வேண்டும். அல்லது எதிர்காலத்திலே உங்களுடைய பிள்ளைகள் தான் மிக மோசமாக, இந்த குடும்ப வாழ்க்கையில், அடிமைத்தனத்தில், பாதிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மதுபோதைக்கு அடிமையாவதால்தான் பிள்ளைகள்தான் எதிர்காலத்தில் பாதிக்கப்படபோகிறார்கள்.
பிள்ளைகள் மத்தியில் பெற்றோர் பேசவேண்டும். தனியே பள்ளிக்கூடத்துக்கு வருவதும் போவதும் மட்டுமே அல்ல கல்வி. சமூக சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கணினித் துறையையும் தற்போதைய கால சூழ்நிலையில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தனியே புத்தகத்தைக் கற்பதற்கு அப்பால், இச்செய்தியினை நீங்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். தாய்மார், நீங்கள் உங்களுடைய குடும்பங்களில் அல்லது பொது நிகழ்சிகளில் சில விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும்.
ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு என்ன கல்வியியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூடுதலாக, பட்டதாரிகள், கலைத் துறையைக் கற்று, வேலையில்லாத பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். காலத்திற்கு ஏற்ப, பொருத்தமான கல்வியைக் கற்பதன் ஊடாக, சிறந்த வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரியகுட்டி பரஞ்சோதியின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து, கோப்பாய் தொகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் 36 பேருக்கு, சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.