நச்சு கலந்த மதுவால்தான் நடிகர் கலாபவன் மணியின் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்று ஹைதராபாத் தடயவியல் துறை தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இது மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், மலையாள திரையுலகில் பிரபலமாக விளங்கியவர் நடிகர் கலாபவன் மணி. 45 வயதான இவர், கடந்த மார்ச் 6 ஆம் திகதி திடீரென மரணமடைந்தார். கல்லீரல் பிரச்னை காரணமாக ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார் என்றும், சம்பவத்துக்கு முன்தினம் தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் கலாபவன் மணி இறந்ததாகவும் தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து, கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடலில் பூச்சி மருந்து இருந்ததாகவும், மெத்தில் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியானது.
இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தது. அதனால், கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு கலாபவன் மணியின் உடல் பாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதனால், இந்த மர்மச்சாவு குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து கலாபவன் மணியுடன் மது அருந்திய அவரது நண்பர்களான நடிகர் ஜாபர், ஷாபு உள்பட சிலரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஜாபர் இடுக்கி, ”நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம்’ என்று பொலிசில் கூறி இருக்கிறார்.
”கலாபவன் மணி மது அருந்தியபோது நான் அங்கிருந்து சென்று விட்டேன்’ என்று சாபு பொலிசில்; வாக்குமூலம் அளித்தார். மேலும், நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது.
இதனையும் சாபு மறுத்துள்ளார். ”கலாபவன்மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னைச் சம்பந்தப்படுத்துகிறார்கள். அவருடன் நான் மது அருந்தவில்லை’ என்று கூறினார்
மேலும், அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள் என்றும். கலாபவன் மணி மருத்துவமனையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசர அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், அங்கிருந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி உள்ளார்கள். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி உள்ளனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்ததாகக் குற்றஞ்சாட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனாலும் இந்த வழக்கில் பொலிசாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் மந்தநிலையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஐதராபாத் தடயவியல் துறை, கலாபவன் மணியின் உடல்கூறு சோதனை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில், ”கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் இந்த மெத்தனால் நச்சுப்பொருள் ஆகும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை எடுத்துக்கொண்டால், கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும்.
அப்படித்தான் கலாபவன் மணியின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது’ என்று தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.
தடயவியல் துறையின் இந்த அறிக்கையால், கலாபவன் மணியின் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, மர்ம முடிச்சுக்கள் அவிழ ஆரம்பித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து, கலாபவன் மணிக்கு நச்சு கலந்த மதுவை கொடுத்தது யார்? என பொலிசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.