கலாச்சார ஆடைகள் அணிந்து நல்லூருக்கு வருமாறு கோரிக்கை

yokeswarey-mayarநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இதெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் யாழ். மாநகர சபை வழமை போன்று மக்களின் கருத்தினையும் உள்வாங்கி மேற்கொண்டுள்ளது.

அத்துடன், ஆலயத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், தொல்லைகளை தவிர்த்து பொதுமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு, யாழ். மாநகர சபையின் சைவசமய விவகாரக்குழுவினால் எதிர்வரும் 30ஆம் திகதி நாவலர் கலாச்சார மண்டபத்தில் பண்ணிசைப் போட்டி நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை சைவசமய விவகாரக்குழு தெரிவித்தது.

பாடசாலை மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பண்ணிசைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு மற்றும் மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் வகைப்பபடுத்தப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாணவர்கள் பாடப்படவேண்டிய தேவாரப் பாடல்கள், மேற்படி போட்டிக்காக விண்ணப்பத்திருந்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக்குழு தெரிவித்தது.

இந்தப் பண்ணிசைப் போட்டிகளில் முதலாம் இடத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாமிடத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என சைவசமய விவகாரக்குழு மேலும் தெரிவித்தது.

Related Posts